fgdhdfx

Advertisment

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில், எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19-வது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட, கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்த காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு.

பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியான படத்தின் டீசருக்கும், பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான ‘ஜெய் சுல்தான்’ என்ற பாடலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் இரண்டாம் பாடலான “யாரையும் இவ்ளோ அழகா...” எனத் தொடங்கும் பாடல், மார்ச் 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, வெளியான 'எப்படி இருந்த நாங்க' என்ற பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் தற்போது கரோனாவின் இரண்டாம் அலை அதிகமாகி வருகிறது. இதனால் திரைப்படங்கள் சொன்ன தேதியில் ரிலீசாகுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பம் 'சுல்தான்' படத்துக்கும் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில்...

''இந்த கோவிட் சூழ்நிலையில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி 'சுல்தான்' படத்தை வெளியிடுகிறோமா என்று எங்கள் நண்பர்கள் பலர் கேட்கிறார்கள். இதுவரை அந்த மாதிரி எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் சொன்ன தேதியில் இருந்து மாறவில்லை. எனவே தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, திரையில் அதிகபட்ச சந்தோஷத்தை அனுபவிக்கக் காத்திருங்கள்" எனக் கூறியுள்ளார்.