Skip to main content

“வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- எஸ்.ஆர். பிரபு!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

sr prabhu

 

கரோனா அச்சுறுத்தலால் கடந்த 100 நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. மேலும், மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இனி எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இதனிடையே, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த 6ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 

இதனைத் தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்து கொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக அனைவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படிச் சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

 

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பளக் குறைப்பு குறித்து நடிகர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

 

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள தயாரிப்பாளார் எஸ்.ஆர். பிரபு, “கரோனாவுக்குப் பிந்தைய நிலை குறித்து நான் உட்பட சில தயாரிப்பாளர்கள் கலந்து ஆலோசித்தோம். பல்வேறு சங்கங்களுடன் ஆலோசித்துச் சம்பளம் உள்ளிட்ட தயாரிப்புச் செலவுகள் குறித்து ஒரு சுமுகத் தீர்வை எட்ட முடிவு செய்துள்ளோம். அதைத் தாண்டி வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Next Story

‘ஜப்பான்’ ரிலீஸ் தேதி அப்டேட்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

japan release date update

 

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. கார்த்தியின் 25வது படம் என்பதால் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஆர். பிரபு, "ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை திட்டமிட்டுள்ளோம். கார்த்தியின் 25வது படமென்பதால் அவரது திரைப் பயணத்தில் பயணித்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், அவரது குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 

 

தீபாவளி என்பதால் ரசிகர்களின் வரவேற்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். காலை 9 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகிறது. இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த நக்கல் படமாக இருக்கும். அரசியல் படம் கிடையாது. குடும்பத்தோடு வந்து ஜாலியாக சிரித்து மகிழும்படி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதற்குள் ராஜு முருகன் ஸ்டைலில் ஒரு சின்ன கருத்தும் இருக்கும். எல்லா அம்சங்களும் இருக்கும். ஆனால் முகம் சுளிக்கிற வன்முறை இருக்காது" என்றார்.