Skip to main content

”சந்தானம் சார் அப்படி போயிருக்கக்கூடாது” - திரையுலக அனுபவம் பகிரும் ’சுந்தர பாண்டியன்’ இயக்குநர்

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

 SR Prabhakaran

 

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், உதயநிதி ஸ்டாலின், சந்தானம், விஜய் சேதுபதி குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”ஒரு நடிகராக உதயநிதி சார் ரொம்பவும் மெச்சூராகிவிட்டார். கேரக்டரை உள்வாங்கி அதற்கேற்ப மாறத்தெரியவில்லை என கதிர்வேலன் காதல் படம் பண்ணும்போது சொன்னார். சுந்தரபாண்டியன் முடித்துவிட்டு இரண்டாவது படமாக கதிர்வேலன் காதல் படத்தை இயக்கினேன். அது உதயநிதி சாருக்கும் இரண்டாவது படம். அப்போது ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டும்தான் நடித்திருந்தார். ’முந்தைய படத்தில் சசிகுமார் சாரை இயக்குனீங்களே, எனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கு’ என்றுகூட என்னிடம் கேட்டிருக்கிறார். கேரக்டருக்கான மேனரிஸத்தை உள்வாங்கி நடிப்பது பற்றி அவருக்கு கூறினேன். மனிதன் படத்திலேயே நல்ல மாற்றம் தெரிந்தது. அடுத்தடுத்த படங்களில் தன்னை மெருகேற்றி இன்றைக்கு நல்ல ஆர்டிஸ்ட்டாகிவிட்டார். 

 

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சந்தானம் சார் போயிருக்கக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். சின்ன சின்ன கேரக்டர் பண்ணும் காமெடியனாக அவர் இல்லை. கதாநாயகனுக்கு இணையான பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். கவுண்டமணி, வடிவேலுக்கு பிறகு சந்தானத்திற்குத்தான் அது அமைந்தது. காமெடியனாக இருந்தாலும் ஹீரோவுக்கு சமமாக இருந்தார். அந்த இடத்தை யாரும் இன்று நிரப்பவில்லை. 

 

சுந்தரபாண்டியன் படத்திற்கு முன்பிருந்தே விஜய்சேதுபதி எனக்கு நல்ல பழக்கம். சுசீந்திரனும் நானும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். வெண்ணிலா கபடி குழு படத்தின் ரிலீஸுக்கு முன்பு அந்தப் படத்தை பார்த்த உடனேயே விஜய்சேதுபதி பெரிய நடிகராக வருவார் என்று கூறினேன். முதலில் சுந்தர பாண்டியன் படத்தில் உசிலம்பட்டி ஜெகன் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க எனக்கு உடன்பாடில்லை. அப்போதுதான் தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் ஒருவரை சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி உறுதியாக இருந்தார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அது எவ்வளவு ஸ்ட்ராங்காக உள்ளது என்பது  அவருக்குத் தெரிந்திருந்தது”. இவ்வாறு எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்