இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கூலி’ படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் டாப் நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களோடு சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ளனர். இதனால் படத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரம்மாண்ட ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த சில வாரங்களாக புரொமோஷன் பணிகளால் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலே முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி விட்டது. முன்பதிவிலே ரூ.14 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையும் இந்த எதிர்பார்ப்பிற்குப் பக்கபலமாக அமைந்தது. இவர் இசையில் வெளியான ‘சிக்கிடு வைப்’, ‘மோனிகா’ மற்றும் ‘பவர்ஹவுஸ்’ பாடல்கள் உள்ளிட்ட அனைத்துமே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கூலி படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் ரிலீஸாகும் ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இரவு 2 மணிக்குள் மொத்தம் ஐந்து காட்சிகள் ரிலீஸாகும் நாளன்று வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நாளில் 4 காட்சிகள் தான் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு காட்சி வழங்கப்பட்டுள்ளதால் படத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.