Special medical camp organized by vijay makkal iyakkam

Advertisment

சென்னையைப்புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. படிப்படியாக நீர் அகற்றப்பட்ட நிலையில், சென்னை நகரை முழுவதுமாக சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகரத்திற்கு அழைத்து வரப்பட்டு மாநகரை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த இயக்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.