Skip to main content

கவிச்சமுத்திரத்தை சோடாபாட்டில்கள் என்ன செய்யும்?

 

vairamuthu


வெறும் ஒன்றரை கிராம் எடையுள்ள ஒரு சின்ன வைரஸ், இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சமூகத்தின் அவலங்கள் குறித்து கவிப்பேரரசுவிடம் சில கேள்விகளை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொலைபேசி உரையாடலில், "கலைகள் மக்களுக்கானது என்று மாவோ சொன்ன கூற்றைத்தான் பலரும் மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் இன்று மக்களின் மனநிலையோ எதையும் ரசிக்கக் கூடியதாக இல்லை. உயிர் வாழ்வதே கடினமாகிவிட்ட சூழலில் கலைகளும், இலக்கியமும் இரண்டாம்பட்சம் ஆகிவிட்டதே. அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?” என்றேன்...

 

பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கவிப்பேரரசு, ‘நல்ல கேள்வி’ என்று சொன்னபடியே, “மாவோ சொன்ன கூற்றை நாம் வழிமொழிவோமேயானால், இப்போதுதான் கலையின் தேவை கூடியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இப்போதுதான் கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்த நேரத்தில்தான் மக்களுக்கு நம்பிக்கை தேவை! மக்களுக்கு களிப்பூட்டுவது மட்டுமே கலை அல்ல; மக்களுக்குத் தெளிவூட்டுவது கலை. மக்களைப் பரவசப்படுத்துவது மட்டுமே இலக்கியம் அல்ல; மக்களை உயிர்ப்பிப்பது இலக்கியம். அதனால் இன்றைக்குக் கலைஞர்களும், படைப்பாளிகளும்தான் மக்களின் துவண்டுபோன இதயங்களைத் தூக்கி நிறுத்துகிற பணியினைச் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். என் சக படைப்பாளிகளும் அதையே விரும்புகிறார்கள். அதையே செய்துகொண்டும் இருக்கிறார்கள்” என்றார் உணர்ச்சி ததும்ப!

 

ஆம்! இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. வயிற்றுக்குச் சோறு இல்லாமல், வாழ்க்கை என்பதையே தொலைத்துவிட்ட உழைக்கும் மக்களின் பெருங்கூட்டத்தை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருப்பது இசையும், கவிதையும், தத்துவங்களும், நெஞ்சத்தின் ஓரத்தில் ஓரளவேனும் ஒட்டியிருக்கும் ரசனையும்தான். அவைதான் நிர்க்கதியான பாலையென மாறிவிட்ட இப்பெருவாழ்வில், நம்பிக்கை ஊற்றாகப் பெருக்கெடுத்து நம்மை வாழச் செய்கின்றன.

 

மக்களிடத்தில் ரசனை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை. அந்தக் கடமையைச் சிறப்பாக, சற்றொப்ப அரை நூற்றாண்டு காலமாகச் செய்துவரும் கவிப்பேரரசுவுக்கு 66ஆவது பிறந்தநாள். அவரின் கவிதைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம் ஏராளம். ஆயிரம் கைகள் கூடினாலும், வானத்து நட்சத்திரங்களை எப்படி எண்ணிவிட முடியாதோ, அதுபோலவே கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணத்தைச் சில பக்கங்களில் சொல்லிவிட முடியாது. இருந்தாலும், அவரின் சில கவிதைப் பக்கங்களை இங்கே புரட்டுகிறேன்...  

 

புதுக்கவிதை
என்பது
சொற்கள் கொண்டாடும்
சுதந்திர தின விழா (திருத்தி எழுதிய தீர்ப்புகள்)

 

ஆம், இரண்டாயிரமாம் ஆண்டு பிறந்த பின்னரே என் பதினெட்டு வயதை நான் கடக்க நேர்ந்தேன். அதனால் புதுக்கவிதைகளே என்னை பெரிதும் பரவசப்படுத்தின. என் இளமைக் காலத்தில் எனக்கு முதலில் அறிமுகமான கவிப்பேரரசுவின் கவிதை... ‘காதலித்துப் பார்’. காதலையும், இந்தக் கவிதையையும் கடந்து வராத இளைஞர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதில் ஒவ்வொரு வரியும் ஒரு நொடி உறைய வைக்கும்...

 

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்
...
இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்  

 

இதே சாயலைத் திரைப்பாடலிலும் கையாண்டு காதலைக் கொண்டாடியிருப்பார்...

 

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும், நாவே உலரும்
...
நாக்கு உதடு
பேசும் வார்த்தை
முத்தமாகும் (சுடும் நிலவு - படம் : தம்பி)

 

'இறக்க முடியாத சிலுவை' என்ற தலைப்பில் காதலை ஏற்க மறுக்கும் அவளைப் பற்றி பாடுகிறார் கவிஞர், அதில் அவரின் கற்பனைகள் அபாரம்!
பூமிக்கு வெளிச்சம்

நீ கண் திறந்துவிட்டாய்
இருட்டு கட்டுக் குலைந்தது
புரிகிறது
அவிழ்த்த கூந்தலை
அள்ளி முடிக்கிறாய்

 

இந்தக் கற்பனையைத் திரைப்பாடலில் மெட்டுக்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பார் கவிஞர்...

 

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி...
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி... (என்ன சொல்லப் போகிறாய் - படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

 

இப்படியாய் கவிப்பேரரசுவின் காதல் வரிகளில் கலந்து, சிறகடித்துப் பறந்தன என் காதல் உணர்வுகள்.
 

vairamuthu

 

திரைப்பாடல்களில் பல வகையில் வானத்தைக் கொண்டாடித் தீர்த்திருப்பவர் கவிஞர். ‘வானம் எனக்கொரு போதி மரம்’ என்ற அவரது முதல் திரையிசைப் பாடலில் தொடங்கி பல பாடல்களில் அதைக் குறிப்பிட முடியும், ‘செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ...’ என்ற வரி அந்தி வானம் கவிஞரின் கவிதையால் அழகாக்கப்பட்டிருக்கும், கவிப்பேரரசுவின் கற்பனைகளில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு கவிதை சாயங்கால நேரம் பற்றி அவர் பாடியிருக்கும் ‘அந்தி’.

 

உழைத்தவன் கரமா
இந்த அந்தி?

முத்தமிட்ட கன்னமா
இந்த அந்தி?

வானம் துப்பிய தாம்பூலமா
இந்த அந்தி?

 

இந்தக் கற்பனைகள் கவிப்பேரரசுவுக்கு தோன்றுவதில் வியப்பு இல்லை. அவர்தான் வானத்தோடும் பேசத் தெரிந்தவர். இயற்கையின் அழகைக் கொண்டாடிக்கொண்டே இருத்தல் மட்டும் போதாது, செயற்கையின் ராட்சச கரங்கள் இயற்கையை அழிக்க வரும்போது கோபம்கொள்ள வேண்டாமா? ஆம் அந்தக் கோபமே ‘அமுதத்தில் விஷம்' கவிதை…

 

பாவிகளே
காற்றுக்கு உயிர் கொடுங்கள்
மனிதனைக் கொன்றுதான்
விஞ்ஞானம் பிழைக்குமா?
இல்லை
சுவாசப்பை இல்லாத
மனிதனைப் படைக்குமா?

 

கற்பனைகள் ரசிக்க வைக்கும், உண்மை மட்டுமே உணரவைக்கும், அப்படி உழைக்கும் மக்களின் வலியையும் வாழ்க்கையையும் பதிவுசெய்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் கவிப்பேரரசு. நிலமற்ற ஏழைகளே இந்த உலகை உருவாக்கும் அச்சாணிகள், வாழ்நாள் முழுதும் உழைத்தே தேய்ந்த வர்க்கம் வீடில்லாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது, உலகத்தின் அவலம்! புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட தன் கனவுக்‘கூடு’ இடிக்கப்படுவதைக் கண்டு சர்க்கார் அதிகாரிகளிடம் அழுது புலம்புகிறாள் ஒரு ஏழைத்தாய்...

 

கதவு மரம் வாங்கக்
காசில்ல ராசாவே
கோணிக் கதவு செஞ்சு
கோட்டைக்கு மாட்டிவிட்டேன்

 

சீட்டுப் புடிச்சுச்
சித்தாளு வேலசெஞ்சி
ஓட்டக் கூரைக்கு
ஒருபகுதி ஓடுவச்சேன்

 

கூடு கலச்சாக்காக்
குருவிக்கு வேறமரம்
வீடு இடிச்சாக்கா
எங்களுக்கு ஏது எடம்?

 

... என்ற வரிகளைப் படிக்கும் போது கண்கள் கலங்காமல் இல்லை.

 

கிராமமோ நகரமோ பெண்கள் எப்போதும் சபிக்கப்பட்டவர்களே. ஆம், ஒரு ஆண் சுதந்திரமாக இருக்க இந்த உலகம் அவனுக்கு அனேக வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. பெண்களின் சிக்கல்களையும் சிரமங்களையும் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை. ஆனால், அதை அனைவரும் செய்யத் தவறுவதால் சமூகம் சமநிலையற்றுக் கிடக்கிறது. ஆடோட்டும் ஒரு சிறுமி பெரியவள் ஆகிறாள், யாரையும் நம்பிவிடாதே என மூத்தக்குடியாளின் மகளுக்கு இளைய குடியாள் ‘ஏண்டியம்மா குத்தவச்ச?’ என்று பாடுகிறாள்...

 

இந்த
ராத்திரிக்கு ராத்திரியே
ரகசியமாய் தலமுழுகி
நாளைக்கே ஆடோட்டு
யாருக்கும் தெரியாது

 

ஆடுமேய்க்கப் போகையிலே
அங்கங்கே நில்லாதே
அடியேஒஞ் சங்கதிய
ஆட்டுக்குஞ் சொல்லாதே

 

கவிஞர்களின் பேனா வானத்தையும் கிழித்துப்போடும் வல்லமையுடையது. ஆம்! சமூகத்தின் சமத்துவமின்மை, ஒப்புக்கு முன்வைக்கும் ஜனநாயகம், மனிதருக்குள் மண்டிக்கிடக்கும் சாதிவெறி எனப் பல்வேறு கவிதைகளில் தன் கோபத்தைப் பதிவு செய்கிறார்...

 

வாக்குச் சாவடிக்கு
வாகனம் இரண்டு;
வாக்களிக்கும் வரை
பல்லக்கு
வாக்களித்தபின்
பாடை
(சலவைக்கு போடாத ஜனநாயகம்)

 

இந்த தேசத்தில்
அடுப்புகளுக்கே இன்னும்
நெருப்புவந்து சேரவில்லை
அதற்குள் கூரைக்கா?
(ஜாதீ)

 

1989களில் எழுதப்பட்ட இந்த வரிகள் 2020-லும் தேவைப்படுகிறது என்பது வெட்கம்தான்!

 

என்றாவது ஒருநாள் விடிகிற பூமி அமைதிக்காக விடிவதையும், அப்போது உலமெங்கும் வெள்ளைப் பூக்கள் மலர்வதையும் நாம் வாழும்போதே காண நேரிடும் என்ற நம்பிக்கை விதையை மீண்டும் மீண்டும் தூவிக்கொண்டே இருப்பது கவிஞர் ஈழதேசம் தொடர்பாக எழுதிய கவிதைகள்தாம். ஓர் ஈழப் போராளிக்கு காதலி கடிதம் எழுதுகிறாள்…

 

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதிலும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்
(துப்பாக்கி எப்போது பூப்பூப்பது?)

 

தாயின் மார்பகம்
அறுக்கப் படுவது கண்டு
அஞ்சி ஓடிய குழந்தை...
தகப்பனின் மண்டையோட்டில்
தடுக்கி விழுந்ததாம்
(ரத்த சாசனம்)

 

இந்த வரிகளைப் படிக்கும்போதே, கவிஞரின் பேனாவில் வழிகிற ரத்தம் நம் இதயத்திலும் வழிந்தோடும்!

 

கல்லறையில் வணங்குவது எனக்கு உடன்பாடில்லை, அப்படிச் செய்வதால் ஒரு கருத்தியல் பேசப்படுமேயானால், அதைச் செய்வதில் தவறில்லை... ஆம், கார்ல் மார்க்ஸ் கல்லறையில் கவிப்பேரரசு மரியாதை செய்துவிட்டு எழுதிய ‘அந்த ஜெர்மானியத் தாடிக்காரன்’ கவிதையில்,

 

அவனுக்கு
அஞ்சலி செலுத்தினால்
இருதய ரத்தம்
இன்னும் சிவக்காதோ? என்ற கேள்வி என் சிந்தனைகளை மேலும் சிவக்க வைத்தது.
 

vairamuthu

 

கவிப்பேரரசுவின் கவிதை வரிகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லிமுடிக்க, சில பக்கங்கள் போதாது. அவர் கவிதையில் சொன்னது போலவே… வானம் போல, பூமி போல, காற்று போல அவர் கவிதையும் நிரந்தரம்தான். தமிழ் இலக்கிய உலகினிற்கு அவர் தந்த பங்களிப்பு இணையில்லாதது. 1950-களில் வைகை அணை கட்டப்பட்டபோது, அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட பதினான்கு கிராமங்களின் வலியைப் பதிவுசெய்யும் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, திருமணமாகி 11 நாட்களிலேயே பழைய பரம்பரைப் பகையை மனதில் வைத்துக் கருவாச்சியை கணவன் கட்டையன் விலக்கிவைக்க, தனியொரு ஆளாக கருவாச்சி போராடுவதை, வறண்டுபோன பூமியைப் போலவே, வலிநிறைந்த வாழ்வாக விவரிக்கும் ‘கருவாச்சிக் காவியம்’, அடுத்தொரு போர்வந்தால் உலகை அழிப்பது அணுகுண்டால்தானோ என விவாதம் போய்க் கொண்டிருக்க, புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் மீது தொடுத்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய போரை விளக்கும் ’மூன்றாம் உலகப் போர்’ என அவரின் இலக்கியப் பதிவுகள் தவிர்க்கமுடியாதவை.

 

கவிஞரின் படைப்புகளில் சிம்மாசனமாய் ஜொலிப்பது, சமீபத்தில் தொகுத்திருக்கும் தமிழாற்றுப்படை. தொல்காப்பியர் காலம் முதல் புதுக்கவிதை காலம் வரை பல்வேறு தமிழ் ஆளுமைகள் தமிழின் வளர்ச்சிக்காற்றிய தொண்டு பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், நாளைய சமூகத்துக்கு கவிப்பேரரசு தந்த பெருங்கொடை. தமிழாற்றுப்படை அடுத்தடுத்து தொடர வேண்டும் என்பது தமிழ்ச் சமூகத்தின் விருப்பம்.

 

குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும்… முதல் தொகுப்பில் 24 ஆளுமைகளைத் தொகுத்த அவர் பெரியாரில் தன் கடைசி கட்டுரையை முடித்திருப்பார். திருச்சி மாநகரத்தில் அவர் ஆற்றிய உரை இப்போதும்கூட காதுகளில் இடிச்சத்தமாய் கேட்கிறது. தன் கட்டுரையில் கடைசி வரியை இப்படி முடித்தார் கவிப்பேரரசு - ‘இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில், இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலைபெறுவார்கள். ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்!’ இதைக் கேட்டதும் அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. இது போதாதா? கவிப்பேரரசு ஏன் அநாகரிகமாக விமர்சிக்கப்படுகிறார்… அவர்மேல் ஏன் சேறு வாரிப் பூச முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்த்த?

 

http://onelink.to/nknapp

 

கருத்தியலோடு விமர்சிக்கப்படுவதை வரவேற்கலாம். அவரை ஆராதிப்பவர்கள் கூட அதைச் செய்திருக்கிறார்கள். இனியும் செய்வார்கள் என்பது அவருக்கும் தெரியும். அது ஜனநாயகப் பண்புகளில் ஒன்று. ஆனால், அது கருத்தே இல்லாத கூட்டம். வரலாற்றைக்கூட கடன் வாங்கி எழுதுமளவுக்கு வகையற்ற கூட்டம். பொய்களைப் பரப்புவதையே வேலையாக வைத்திருக்கும் அவர்களிடத்தில் நாகரிகத்தை எதிர்ப்பார்க்க முடியுமா?

 

கவிப்பேரரசு வைரமுத்து தமிழர்களின் அடையாளம்! அடங்காத அலைகள் கொண்ட சமுத்திரம். நீங்கள் வீசிய சோடா பாட்டில்களும் சைக்கிள் செயின்களும் கரை ஒதுங்கியிருக்கும். தேடிவந்து எடுத்துக்கொள்ளுங்கள்! தமிழர்கள் அந்தக் கவிதைக் கடலில் முத்துக்குளித்துக் கொண்டேயிருப்போம்!

 

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்