/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_103.jpg)
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இதனிடையே தினசரி எஸ்.பி.பி. உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் எஸ்.பி.பிக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட சரண், "துரதிர்ஷ்டவசமாக இன்று காலை முதல் அப்பாவுக்கு கரோனா தொற்று இல்லை என்ற வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ, அவரது உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது. தயவுசெய்து புரளிகளைப் பரப்பாதீர்கள்" என விளக்கமளித்தார்.
இந்நிலையில் நேற்றுஎஸ்.பி.பி உடல் நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண், அதில்... "மருத்துவர்களிடம் பேசினேன். எல்லாம் சகஜமான நிலையில் இருக்கிறது. நேற்று நான் சொன்னதைப் போல அப்பாவுக்கு சிகிச்சை பலனளித்து வருகிறது. 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். என் அப்பாவுக்காக நீங்கள் காட்டியிருக்கும் அன்பும், அக்கறையும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்பா மீண்டு வர தீவிர சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், அதன் மருத்துவர்களுக்கும் நன்றி; அனைவருக்கும் மீண்டும் நன்றி. தொடர்ந்து பிரார்த்திப்போம். அப்பாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்ப்போம் என நம்புகிறேன். ஒரு விஷயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன். பலர் என்னை இந்த பகிர்வுகளை தமிழில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அப்பாவுக்கு தேசம் முழுவதும் பல ரசிகர்கள் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் நான் பகிர்கிறேன். அப்பா பாடியிருக்கும் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பகிர்வு என்பது எனக்கு அதிக நேரத்தை எடுக்கும். நான் மருத்துவர்களுடன் பேசி வருகிறேன், பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கின்றன, நடுவில் ரசிகர்களுக்கும் செய்தி சொல்கிறேன். மொழி புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு விளக்குங்கள். அப்படிச் செய்யும்போது இந்த செய்தியும் பரவும். நேர்மறை எண்ணங்களும் பரவும்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)