/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_102.jpg)
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இதனிடையே தினசரி எஸ்.பி.பி. உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நேற்று எஸ்.பி.பிக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட சரண், "துரதிர்ஷ்டவசமாக இன்று காலை முதல் அப்பாவுக்கு கரோனா தொற்று இல்லை என்ற வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ, அவரது உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது. தயவுசெய்து புரளிகளைப் பரப்பாதீர்கள்" என விளக்கமளித்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி உடல் நலம் குறித்து நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார் சரண். அதில்... "இன்றைய நிலவரத்தை சொல்லும் முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இன்று காலை, அப்பாவுக்கு கோவிட் தொற்று சரியாகிவிட்டது என்று எங்கிருந்தோ செய்தி வந்தது. இது குறித்து எங்கள் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் எங்களைத் தொடர்பு கொண்டார். ஆனால் அப்போது என்னால் அவர் அனுப்பிய செய்தியை சரியாக பார்க்க முடியவில்லை. அவருக்கு அந்த செய்தி அறிக்கை எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால் அதை வெளியிட நான் அவருக்கு ஒப்புதல் அளித்தேன். பின்பு தான் அது அப்பாவின் கோவிட் நிலையைப் பற்றிய விஷயம் என்பது எனக்குத் தெரிய வந்தது.
அப்பாவுக்கு தொற்று இருக்கிறதோ, இல்லையோ. அது அவரது தற்போதைய உடல்நிலையை மாற்றாது. அவர் தொடர்ந்து செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியோடு இருக்கிறார் என மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று நான் அப்பாவைப் பார்க்கசென்றேன். கடந்த இரண்டு வாரங்களாக அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் விழிப்பாக இருந்தார். மருந்துகளால் அவர் சற்று மயக்க நிலையிலிருந்தார். முழுமையாக விழிப்புடன் இல்லையென்றாலும் மருந்துகளின் தாக்கம் சற்று அவருக்கு மயக்க நிலையைத் தருகிறது, அவர் என்னைப் பார்த்தார். அடையாளம் கண்டு கொண்டார். அவர் எப்படி உணர்கிறார் என்று நான் கேட்டேன். உங்கள் அனைவரது நல் வார்த்தைகள், ஆசீர்வாதங்களை அவருக்கு சொன்னேன்.
அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர் வலிமையாக இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்று சொன்னேன். அவர் கட்டை விரலை உயர்த்தி காட்டினார். நான் எப்படி இருக்கிறேன், அம்மா எப்படி இருக்கிறார் என சைகையில் கேட்டார். அவர் அறையில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல்கள் அவருக்கு கேட்கிறது. உங்கள் அனைத்து பிரார்த்தனைகளும், பிரசாதங்களும் தீவிர சிகிச்சை பிரிவுக் குழுவின் மூலமாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கடவுள் படங்கள், பிரசாதங்கள் அவரது படுக்கைக்கு பக்கத்தில், பின்னால் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அப்பாவைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கும் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றே நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
இனி அவரை தினமும் நான் சென்று பார்த்து வருவேன். அது அவருக்கு நல்ல ஊக்கத்தை தரும் என நினைக்கிறேன். அவருக்காக உங்கள் அத்தனை பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர் நன்றி சொல்ல விரும்புவார் என உறுதியாக நினைக்கிறேன். நம் பிரார்த்தனைகளைத் தொடர்வோம். உங்கள் அனைவரின் அன்பு, அக்கறைக்கு எங்கள் குடும்பம் கடன் பட்டுள்ளது என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அப்பா நம்மிடம் மீண்டும் வருவார், உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது. எம்ஜிஎம் ஹெல்த் கேர் தரப்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். அப்பாவுக்கு உதவி வரும், அவர் விரைவில் குணமடைய உதவி செய்து வரும் மருத்துவக் குழுவுக்கு நன்றி. மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)