
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இதனிடையே தினசரி எஸ்.பி.பி. உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நேற்று எஸ்.பி.பி உடல் நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண், அதில்...
“உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான ஆகஸ்ட் 26ஆம் தேதியாக இது இருக்கட்டும். இன்று மதியம் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்பாவுக்குச் சிகிச்சை தரும் ஒட்டுமொத்த மருத்துவக் குழுவையும் சந்தித்தேன். அப்பாவின் நிலை பற்றி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தபோது எந்த நிலையில் இருந்தாரோ அதைவிட தற்போது அவர் தேறியிருக்கிறார். நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். மயக்க நிலை இன்றி அவர் சரியாகவே இருக்கிறார். சவுகரியமாக உணர்கிறார். இந்த நோயிலிருந்து மீளும் பாதையில் முதல் படியை அப்பா எடுத்து வைத்திருக்கிறார் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். வேகமாக நடக்காது என்றாலும் கண்டிப்பாக இன்னும் படிப்படியாக அப்பா மீள்வார். நிதானமாக, நிலையாக அப்பா அந்தப் பாதையில் இருக்கிறார்.
இதை நான் சொல்லக் காரணம், அந்த நம்பிக்கையை எம்.ஜி.எம். மருத்துவமனை எனக்குக் கொடுத்திருக்கிறது. இன்று அப்பாவைச் சந்தித்தேன். அன்று பார்த்ததைவிட இன்று இன்னும் விழிப்புடன் இருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல எழுதிக் காட்ட நினைத்தார். ஆனால், அவரால் பேனாவைச் சரியாகப் பிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த வாரத்தில் அவரால் பேனாவைப் பிடித்து எழுதி என்னிடம் தொடர்புகொள்ள முடியும் என்று நம்புகிறேன். அப்பாவுக்குத் தினமும் நாளிதழ் செய்திகளைப் படித்துக் காட்டச் சொல்லி மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறேன். உங்களுக்கு செய்திகள் கேட்பது பரவாயில்லையா என்று கேட்டேன். அப்பா, 'சரி' என்று தலையாட்டினார். அப்பா இசை கேட்கிறார், அதற்கேற்றார் போல விரல்களை அசைக்கிறார். பாட முயல்கிறார். இதெல்லாம் அப்பா மீண்டு வருகிறார் என்பதற்கு மிக நல்ல அறிகுறிகள். நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அனைவரின் அக்கறை, அன்பு, பிரார்த்தனைகளுக்கு மீண்டும் மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் குடும்பம் நன்றிக்கடன்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.