
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா தொற்று, பலரையும் பாதித்து வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தெரிவித்து வந்தார்.
அண்மையில், எஸ்.பி.பிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டதாகவும் ஆனாலும் சிகிச்சை அளிக்கப்பட்டுதான் வருகிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி. குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண்.
அந்த வீடியோவில், “பாடகார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 15 முதல் 20 நிமிடம் வரை மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பி எழுந்து அமர்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.