/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sp-charan.jpg)
பிரபல பாடகர் எஸ்.பி.பி கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி திடீரென சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி காலமானார்.
இதன்பின் சமூகவலைதளத்தில் எஸ்.பி.பி.யின் மருத்துவக் கட்டணம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வதந்தி ஒன்று பரவி வந்தது. அதை மறுக்கும் விதத்தில் எஸ்.பி.பி. சரண் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “இதை திடீரென்றுதான் பதிவு செய்கிறேன். இந்தப் பதிவு செய்ய சரியான தளம் இதுதானா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதைப் பேசுவது இப்போது அவசியமாகிறது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை குறித்தும் என் அப்பாவுக்கான சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலவுவது துரதிர்ஷ்டவசமானது. சில விஷயங்களை மொத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அப்பா மருத்துவமனையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தைத் தரும் வரை அப்பாவின் உடலை எம்.ஜி.எம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், பேசித் தெரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தைத் தருகிறது.
இவர்கள் எஸ்.பி.பி.யின் ரசிகர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்படியான ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களைக் காயப்படுத்தவே மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும் நபரை எஸ்.பி.பி மன்னிப்பார். நான் இந்த நபரை மன்னிக்கிறேன். ஆனால், இவர் சற்று முதிர்ச்சியடையவேண்டும். ஒழுங்காக யோசிக்க வேண்டும். சரியான விஷயத்தைச் செய்ய வேண்டும்.
ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார். என்ன சிகிச்சை, எவ்வளவு கட்டணம் என்று எதுவும் அவருக்குத் தெரியாது. யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று கூடத் தெரியாது. நான் இப்போது எதையும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம்.
இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. ஒருவரின் செயல் எவ்வளவு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது என்பது வருத்தமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் நடந்து வரும் விஷயங்களால் ஏற்பட்டிருக்கும் மனவலிக்கு நடுவில் பத்திரிகையாளர்களை ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி, பேசுவதெல்லாம் எவ்வளவு அசந்தர்ப்பமானது என்பது அவருக்குத் தெரியவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
இணையத்தில் எளிதாக ஒரு விஷயத்தைப் பதிவேற்றிவிட்டு, மற்றவர்களின் வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது சுலபம். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றுதான் நான் சொல்வேன். எம்.ஜி.எம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது.
மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனையின் தலைவர் எனக்குத் தினமும் பிரார்த்தனைகள் அனுப்புவார். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.
அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்.ஜி.எம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள். அனைவருமே சிறந்தவர்கள். இந்த வதந்திகளைப் பரப்பும் நபர்களும் சிறப்பானவர்களாக ஆகலாம். அன்பைப் பின்பற்ற முயலுங்கள். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் எஸ்.பி.பி.யின் மருத்துவக்கட்டண சர்ச்சை குறித்து எஸ்.பி.சரண் மற்றும் மருத்துவக் குழு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ஏன் அஜித் வரவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரண், “அஜித் வந்து பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அது பிரச்சினை இல்லை. அது குறித்து எந்தக் கவலையும் இல்லை, அஜித் எனக்கு நண்பர், எனது தந்தைக்கும் நல்ல பரிச்சயமானவர். ஆனால், அதுகுறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று எஸ்.பி. சரண் கூறினார்.
மேலும் எஸ்.பி.பி. கரோனாவால் இறக்கவில்லை என்றும் அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறிய சரண், நுரையீரல் தொற்று காரணமாகவே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறந்ததாகக் குறிப்பிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01_31.gif)