அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.