கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷங்கர், அனிருத், நெல்சன் திலீப்குமார், அருண்ராஜா காமராஜ், அறிவழகன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், சிம்பு, புஷ்கர் காயத்ரி, பொன்ராம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தள பக்கத்தில், "அருமையான படம். என் அண்ணா லாரன்ஸின் நடிப்பு மிக சிறப்பு. அதோடு பெருமையாகவும் உள்ளது. எஸ்.ஜே சூர்யா சார், ஒரு இன்ஸபிரேஷன்" என குறிப்பிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.