பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘யாதும் அறியான்’. படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் 2026ல் த.வெ.க. தலைவர் விஜய், முதல்வராக இருப்பதாக போஸ்டர் இடம் பெற்றிருந்தது. இது பலரது கவனத்தை ஈர்த்தது.
இதனையடுத்து படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் செளந்தரராஜன், படத்தொகுப்பாளர் பத்திரிகையாளர் டி.எஸ்.சுபாஷ், நடிகர் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் சௌந்தரராஜா பேசுகையில், “இந்த படம் எனக்கு எப்படி தெரிய வந்தது என்றால், விஜய் அண்ணா போஸ்டர் தான் நான் பார்த்தேன், இலவசம் இருக்க கூடாது, தமிழக முதல்வர் விஜய், என்று போஸ்டரில் போட்டு இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது தான் விசயம் இந்த படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது. தளபதி விஜய் என்பது வெறும் பெயர் இல்லை, ஒருகோடி பேரின் உயிர், அதில் நானும் ஒருவன். நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை.
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், விஜய் அண்ணா பேசிய பிறகு தான் எனக்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைத்தது. என் பெயருக்கு உயிர் கொடுத்தது தளபதி விஜய் அண்ணா தான். அவருடன் பழகியதில் இருந்து சொல்கிறேன், நான் இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறேன், உலகத்தமிழர்கள் மனதில் விஜய் அண்ணா வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இது நம்பிக்கை இல்லை, 2026-ல் அவர் முதல்வராவது உறுதி. இலவசம் என்பது எனக்கும் பிடிக்காது. அது ஊக்கத்தொகையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இலவசத்தை கொடுத்து நம்மை சோம்பேறிகளாக்கி விட்டார்கள். இயக்குநர் கோபி அதை சொன்னது சிறப்பாக இருந்தது. அப்போது என்றால் இளைஞர்கள் அந்த மாற்றத்தை நோக்கி வந்துவிட்டார்கள். நான் இதற்கு முன்பாகவே விஜய் அண்ணாவை முதல்வராக காலண்டர் அடித்துவிட்டேன், ஆனால் அதை வெளியிடவில்லை, என் உறவினர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டேன். இதில் நான் கோபியை விட சீனியர் என்பதில் பெருமை.
அரசியலும், கலையும் இல்லாத வாழ்க்கை முழுமையடையாது. இது இசை வெளியீட்டு விழா இதில் அரசியல் பேசக்கூடாது என்றால் எப்படி, பொது இடத்தில் கலைப்பற்றி பேசக்கூடாது என்றா எப்படி, ஒவ்வொரு மனிதரிடமும் இரண்டும் இருக்கிறது. லாக்கப் மரணமடைந்த அஜித்குமாருக்காக போராட்டம் நடத்த த.வெ.க அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதுவரை எந்த கட்சிக்கும் போடாத விதிகளை போட்டிருக்கிறார்கள். காவல்துறையை பார்க்கும் போது பாவமாக தான் இருக்கிறது. கலைஞர் ஐயா முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வஞ்சிக்கப்படுவார், ஜெயலலிதா முதல்வராக இருந்தால் கலைஞர் ஐயா வஞ்சிக்கப்படுவார். ஆனால் இரண்டுமே ஒரே காவல்துறை தான். எங்களுக்கு இதுபோல் எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், நெருக்கடி கொடுத்தாலும், எங்கள் தலைவர் விஜயையும், தமிழக வெற்றிகழகத்தை ஒடுக்க முயற்சித்தாலும் நாங்கள் போராடி வெல்வோம், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடுவோம். கம்யூனிசக் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாற்றத்தை நோக்கி எங்களுடன் கைகொடுத்தால், எங்கள் தலைவர் விஜய் சிறப்பான ஆட்சியை கொடுப்பார் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
படத்தின் இயக்குநர் கோபி பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் பெரியவர்களுக்கு நன்றி, அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நேரம் இல்லாததால் ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெளிச்சத்தில் என்னை பேசவைத்த மற்ற டெக்னீஷியன்களுக்கு நன்றி. செளந்தரராஜன் பிரதர் பேசும் போது நிறைய எதிர்ப்புகள் வந்தது, நாம எதிர்ப்புகளையும், எதிர்மறைகளையும் கடந்து செல்வோம், நம்பிக்கையுடன் இருங்க. விஜய் சாரின் விசயம் எதற்காக வைத்தீர்ங்கள் என்று கேட்டார்கள், நிறைய மீம்ஸ் கூட வந்தது. இந்த காட்சிகள் படத்தில் இருக்காது, நீக்கிடுவாங்க என்று சொன்னாங்க. நீங்க டிரைலரில் என்னவெல்லாம் பார்த்தீர்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க வாங்க.
இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் வைத்தேன், பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம்.” என்றார்.