‘18 கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் வெப் சீரிஸ் ‘சட்டமும் நீதியும்’. உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் கடந்த 18ஆம் தேதி முதல் ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமாகிவருகிறது.

இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜீ5 தளத்தில், 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

நிகழ்வில் சரவணன் பேசுகையில், “சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி” என்றார். 

நடிகர் சௌந்தரராஜா பேசுகையில், “தயாரிப்பாளர் பிரபாகரன் என் மச்சான். நான் அவனை சினிமாவுக்கு வராதே என பலமுறை சொல்லி, சண்டை போட்டுள்ளேன். ஆனால் கேட்க மாட்டான். பிடிவாதமானவன், இந்த வெற்றி அவனது உழைப்பால் வந்தது. அவன் லட்சியம் மீது அவனுக்கு இருந்த வெறி தான் அவனை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த சீரிஸை சின்ன பட்ஜெட்டில் எடுத்து, அதை அதற்கு அதிகமாக விளம்பரம் செய்து ஜெயித்திருக்கிறான். அவனுக்கு வாழ்த்துக்கள். இந்த சீரிஸை எடுத்துத் தந்த குழுவிற்கு வாழ்த்துக்கள். சரவணன் சித்தப்பு இந்த சீரிஸிற்கு முழு பலமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி” என்றார்.