Soubin Shahir  join rajini lokesh kanagaraj in coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ் நடித்து வருவதாக விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசனும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

இப்படத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்திற்காக ரஜினியை லுக் டெஸ்ட் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதையடுத்து இப்படத்திலிருந்து புதிதாக ஒரு கதாபாத்திர அறிமுகம் செய்யப்படும் என நேற்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இணைந்துள்ளதாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் சௌபின் சாஹிர் நடித்து வருவதாக தெரிவித்துள்ளது. இவர் மலையாளத்தில் பிரேமம், சார்லி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த பிப்ரவரியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் குட்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.