இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை படத்தில் நடித்த சௌபின் சாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோர் பரவா பிலிம்ஸ் பேனரில் தயாரித்திருந்தனர். இவர்கள் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.
எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் அவர் கொடுத்த புகார் மனுவில், “மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பாளர்கள் லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே இந்த மோசடி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதன் மூலம் அவர்கள் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் முன் ஜாமீன் பெற்றிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலையில், படத்தின் தயாரிப்பாளர்களும் ஒருவரான நடிகர் சௌபின் சாஹிர், காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியிருந்தார். பின்னர் வெளிநாடு செல்வதற்காக ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். அதில் துபாயில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளிநாடு பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் சௌபின் சாஹிர் கோரிக்கையை ஏற்க மறுத்து நிராகரித்து விட்டது. சௌபின் சாஹிர், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டனியில் வெளியான ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.