Advertisment

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டேனா? - சௌபின் ஷாஹிர் விளக்கம்

445

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

Advertisment

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது படக்குழு. இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இதனிடையே கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. மேலும் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே இந்த மோசடி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் முன் ஜாமீன் பெற்றிருந்தனர். 

இந்த நிலையில் சௌபின் ஷாஹிர் உட்பட தயாரிப்பாளர்கள் மூன்று பேரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் அத்தகவலை சௌபின் ஷாஹிர் மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நாங்கள் விசாரணைக்காகத் தான் காவல் நிலையத்துக்கு வந்தோம். எங்களிடம் ஆவணங்கள் இருக்கிறது. அதை சமர்பித்திருக்கிறேன். காவல் துறையினர் எங்களுக்கு சம்மன் அனுப்பவில்லை. தேவைப்பட்டால் தெரிவிப்பதாக அவர்கள் கூறினார்கள். மற்றபடி நான் கைதாகவில்லை. விசாரணைக்காகத்தான் ஆஜரானேன்” என்றார்.

police Manjummel Boys actor Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe