சூரி கதையின் நாயகனாக புதிதாக நடித்துள்ள ‘மாமன்’ படம் கடந்த மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி நடித்தது மட்டுமல்லாமல் கூடுதலாக கதையும் எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சூரி பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து வந்தார். இடையே படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை ஒவ்வொருத்தராக குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கம் மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். இதுவரை நடிகர்கள் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன், ஒளிப்பதிவாளர் தினேஷ், நடிகை விஜி சந்திரசேகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இவர்களை தொடர்ந்து தற்போது படத்தின் நாயகி ஐஸ்வர்யா லெக்ஷ்மி குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஐஸ்வர்யா லெக்ஷ்மி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யாவுக்கு மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.