
சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.
காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார்.