
கரோனாவால் ஊரடங்கு தொடங்கப்பட்ட சமயத்தில் தனது குழந்தைகளுடன் தினசரி ஒரு வீடியோவை பகிர்ந்து வந்தார் சூரி. அவர் குழந்தைகளுடன் செய்யும் சுட்டித்தனங்கள் பலரையும் கவர்ந்தது. ஊரடங்கு நீடித்ததால் வீடியோ போடுவதை நிறுத்திக்கொண்டார்.
சென்னையிலிருந்த சூரி தொடர் ஊரடங்கு காரணமாக, தனது குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள ராஜாக்கூர் கிராமத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார்.
இந்நிலையில் தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை கருப்பனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அதனுடன், “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் - எங்க கருப்பன் நடந்து போனா!!” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தக் காளையின் புகைப்படங்கள் வைரலானது. தற்போது சூரி கருப்பன் காளை குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கருப்பன் காளை இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது இதுவரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை, ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் கருப்பன்.
வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையைப் பராமரிப்பவர்களுக்கும், ஊர்மக்கள் வீட்டில் ஏதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அவர்களுக்கும், கருப்பன் காளை சார்பாக அளித்துவிடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.