
நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, விடுதலை படத்திற்குப் பிறகு நாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹீரோவாக அவர் நடித்த கருடன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். மலையாள நடிகையான அன்னாபென் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து தி லிட்டில் வேவ் புரொடெக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகியும் விருதுகளையும் குவித்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ், “கொட்டுக்காளி என்பது தென் மாவட்டங்களில் பயன்படுத்துகிற வழக்கமான வார்த்தை. ரொம்ப அரிதாகத் தான் எழுத்தாளர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். செவி வழியாக பல நூறு வருடங்களாக கடந்து வந்த ஒரு வார்த்தை. அதற்கு அர்த்தம் பிடிவாதமாக இருப்பது என்பது. இந்த பெயர் படத்தில் வரும் பெண் கதாபாத்திரத்திற்கு சரியானதாக இருக்கும். அதனால் படத்திற்கு இந்த தலைப்பு வைத்தோம். படத்தில் சேவலும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. படத்தில் பாடல் இல்லை. பின்னணி இசையும் லைவ் சவுண்டையும் பயன்படுத்தி இணைத்துள்ளோம். கதைக்கு அது தேவைப்பட்டது. இசையமைப்பாளர் இல்லாமல் ஒரு படம் பண்ணவேண்டும் என்பதல்ல நோக்கம். அது தேவைப்படவில்லை” என்றார்.