
நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, விடுதலை படத்திற்கு பிறகு நாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹீரோவாக அவர் நடித்த கருடன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். மலையாள நடிகையான அன்னாபென் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து தி லிட்டில் வேவ் புரொடெக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகியும் விருதுகளையும் குவித்து வருகிறது. பி.எஸ் வினோத்ராஜ் இப்படத்துக்கு முன்பாக இயக்கிய கூழாங்கல் படமும் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு விருது வாங்கியது. அதோடு 94வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 23ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
#KottukkaaliFromAug23 😊👍
pic.twitter.com/Gzf9kbn5F2— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 23, 2024