soori hotel issue

நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். மதுரையில் பல்வேறு பகுதிகளில் இந்த உணவகம் இருக்கும் நிலையில் அதில் ஒரு கிளையாக ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் இருக்கிறது. இந்த உணவகம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சுகாதாரமில்லாத தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், அந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், “இந்த மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள பகுதி அருகே அம்மன் உணவகத்தினர் ஆக்கிரமித்துள்ளதோடு, அதன் அருகே சமைக்க தேவையான காய்கறியை வெட்டுதல், உணவுப் பொருட்களைத் தயாரித்தல், பாக்கெட் போடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எலி, கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளது.

Advertisment

இதனால், செவிலியர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அம்மன் உணவகத்தின் அருகில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு வரும் நபர்கள், அம்மன் உணவகத்திற்கு வந்து உணவு சாப்பிடுகிறார்கள். சுகாதாரமில்லாத தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை அவர்கள் சாப்பிடுவதால் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக பொதுப்பணித் துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், தரமற்ற முறையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வரும் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.மேலும் உணவகத்துக்கு சீல் வைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு சூரியின் அம்மன் உணவகம் சார்பில், தனிநபரின் தூண்டுதல் பேரிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment