
வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'கருடன்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த ஜனவரியில் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. பின்பு பிப்ரவரியில் படத்தின் முதல் பாடலாக ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ வெளியானது. இதையடுத்து இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிஊபு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. மே 31 ஆம் தேதி வெளியாகும் என ஒரு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பாசம், துரோகம், பழிவாங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளதாக இருக்கிறது. இறுதியில் சூரி ஆக்ரோஷமாக கத்துவது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.