
கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கூடுதலாக கதை எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
இப்படம் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் சூரி பேசுகையில், “இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் அந்த குட்டி பையன். அதில் யார் நடிக்கிறாரென இயக்குநரிடம் கேட்டேன். பார்த்துகலாம் என முதலில் சொன்னார். பின்பு ஒவ்வொரு ஆளாக ஐஸ்வர்யா லெட்சுமி, சுவாசிகா, இசையமைப்பாளர் என கமிட்டாகிக் கொண்டே இருக்காங்க. நானும் ஒவ்வொரு முறையும் அந்த குட்டி பையன் கேரக்டர் என்னாச்சு என கேட்டுக் கொண்டே இருப்பேன். பார்த்துகலாம் என்றே டைரக்டர் சொல்லிவிடுவார்.
பின்பு தொடர்ந்து அவருக்கு குட்டி பையனுங்க ரீல்ஸ் அனுப்புவேன். அப்புறம் காரில் போகும் போது கண்ணாடியை இறக்கி ரோட்டில் போகும் பையனையெல்லாம் போட்டோ எடுத்து, அனுப்புவேன். அப்போதெல்லாம் திருடன் மாதிரியே திரிஞ்சேன். அந்த போட்டோவையெல்லாம் டைரக்டருக்கு அனுப்பி கேட்டபோது, அப்பவும் பார்த்துகலாம் என்றே சொல்லிவிட்டார். இப்படியே போக ஷூட்டிங்கே ஆரம்பித்துவிட்டது. அதற்கு முன்னாடி ஒரு நாள் கூட குட்டி பையன் கேரக்டர் பத்தி கேட்டேன். அப்பவும் பார்த்துகலாம் என்றே சொல்லிவிட்டார்.
அப்புறம் பூஜையின் போது அவரிடம் கேட்ட போது, ஒரு பையனை காட்டினார். நல்ல சரியான தேர்வு என சொல்லி நடிப்பானா என கேட்டேன். அதெல்லாம் நடிப்பாரென சொன்னார். நானும் சரி ஓ.கே.ன்னு சொல்லிவிட்டேன். முதல் ஷாட், ஆரம்பித்தோம். சாமி கும்பிடுகிற ஷாட். நான் ஆண்டவனே, கடவுளே என் சொன்னேன், உடனே அஜித்தே என அந்த குட்டி பையன் சொன்னான். உடனே அவனிடம் தம்பி, டைரக்டர் சொல்றதை மட்டும் தான் பேசணும் இதெல்லாம் பேசக்கூடாது என்றேன். பின்பு மீண்டும் கடவுளே என்றேன், அவனும் அஜித்தே என சொன்னான். அப்பறம் நான் பேசாமலே ஷாட் நடித்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து டைரக்டர் எங்கே என கேட்டேன். உடனே அந்த குட்டி பையன் அப்பாவா... அங்க இருக்காருன்னு சொன்னான். உங்க அப்பா இல்லப்பா, டைரக்டர் எங்கன்னு சொன்னேன். அப்பவும் அந்த பையன் அப்பா என சொல்ல சரி, அந்த பையனோட அப்பா ஒரு டைரக்டர் போலன்னு நினைச்சுகிட்டேன்.
அப்புறம் அந்த பையன் டைரக்டர்கிட்டயே கூட்டி போய் இதான் அப்பா என்றான். நான் டைரக்டரிடம் யார் இந்த பையன் என்றேன். அதற்கு நம்ம பையன் தான் என்றார். என் பையன் சென்னையில் இருக்கான், இந்த பையன் யார் என கேட்டேன். இது என் பையன் என்று சொன்னார். இதை ஏன் தம்பி ஆறு மாசமா சொல்லவில்லை என்றேன். அதற்கு அவர் கதையை ஓ.கே. பண்ணுனதே என் பையன நடிக்க வைக்கத்தான் சார், உங்களுக்காக இல்லை என சொன்னார். அதோடு இதுக்கப்புறம் என் பையனுக்காக ஒரு கதை யோசிச்சு படமெடுக்குறதுக்கு டைம் ஆகிடும், அதுக்குள்ள அவன் வளர்ந்துடுவான். அதுனாலத் தான் இப்பவே நடிக்க வச்சுட்டேன் என்றார். சரி நமக்கு தேவை ஒரு குழந்தை தானே, அது யாருடைய குழந்தையா இருந்தா என்ன என்று சொல்லிவிட்டேன். சும்மா சொல்லக்கூடாது அந்த பையன் சூப்பரா நடிச்சிருக்கான். சாமி மாதிரி நடிச்சு படத்தை காப்பாத்திருக்கான். அவனுக்கு ஒரு முக்கியமான படமாக இது இருக்கும்” என்றார்.