நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, விடுதலை படத்திற்குப் பிறகு நாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹீரோவாக அவர் நடித்த கருடன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். மலையாள நடிகையான அன்னாபென் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து தி லிட்டில் வேவ் புரொடெக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகியும் விருதுகளையும் குவித்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து சூரி கூறுகையில், “விடுதலை, கருடன் போன்ற படங்களிலிருந்து இந்த படம் மாறுபட்டு இருக்கும். இந்த படத்தோட கதைக்களம் எனக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே புதிதாக இருக்கும். இப்படி ஒரு படம் நமது மக்களுக்குத் தேவை. முக்கியமான படமாக இந்தப் படம் இருக்கும். வாழ்கையில் நடப்பவைதான் சினிமவாக எடுக்கிறோம். ஆனால் இந்த கதைக்களம் நமது வீட்டுப் பக்கத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கும் உணர்வை ஏற்படுத்தும். நடிகை அன்னாபென், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்குப் படத்தில் வசனம் இல்லை. இருந்தாலும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்” என்றார்.