
வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் வரவேற்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “கருடன் படம் எதிர்பார்த்தை விட நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேத்து தமிழ்நாடு அளவில் ஓபனிங்க் நல்லாயிருந்தது. குடும்பங்களும் தியேட்டருக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். உழைச்ச உழைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது போல் இருக்கு.
காமெடியனிலிருந்து கதையின் நாயகன் என்ற வேறொரு பாதையில் பயணிக்கிறோம். அந்தப் பயணத்தில் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அதனால் நம்பிக்கையோடு அதில் பயணிக்கிறேன். இதற்குக் காரணமாக அந்தப் பாதையை அமைத்த வெற்றிமாறன் மற்றும் துரை செந்தில் குமாருக்கு நன்றியைத் தெரிவிச்சுக்குறேன். நான் காமெடியனாக இருந்த போது இருந்த ரசிகர்கள் தான், நான் கதையின் நாயகனாக இருக்கும் போதும் இருக்கிறார்கள். ஸ்கிரிப்ட் நல்லாயிருந்தால் காமெடியனாகவும் இனி நடிப்பேன். புதிய பாதைக்கு இடையூறு இல்லாத வகையில் அதற்குக் கதை இருந்தால் நடிப்பேன். கதையை நோக்கி தான் நான் போய்ட்டு இருக்கேன். சசிகுமாரோடு நடித்த படத்தில் எப்படியிருந்தேனோ, அதே போலத்தான் கருடன் படத்திலும் நடித்தேன். கதையின் நாயகனாக நான் இருந்தாலும் எனக்கு ஹீரோ சசிகுமார் அண்ணந்தான்” என்றார்.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் குறித்த கேள்விக்கு, “மக்களுக்கான ரிசல்டாக இருந்தால் ரொம்ப நல்ல விஷயம். சினிமா ஒரு புறம் இருந்தாலும் அதுவும் ரொம்ப முக்கியம்” என்றார்.