Skip to main content

“ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறார். இதனால்...”- சூரி உருக்கம்

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

soori

 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,65,659 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ” பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்ததுகூட இங்கு நிறையப் பேருக்குத் தெரியவில்லை. நிறையப் பேரிடம் சொல்கிறேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். முக்கியமாக கிராமப்புற மக்களுக்குத்தான் சொல்றேன். ஏனென்றால் அங்கிருந்துதான் நிறைய பேர் தொலைபேசியில் பேசினார்கள். இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் என விளையாடுகிறார்கள்.

தெரிந்த பையன் ஒருவனிடம் தொலைபேசியில் பேசினேன். கிரிக்கெட் எல்லாம் விளையாடக் கூடாது என்று சொன்னேன். நாங்கள் எல்லாம் தள்ளித் தள்ளித்தானே நின்று விளையாடுகிறோம். ஒன்றாகவா நின்று விளையாடுகிறோம் என்று கிண்டலடிக்கிறான். இவ்வாறு கிண்டல் பண்ணுவதற்கும், விதண்டாவாதம் பண்ணுவதற்கும் இது நேரமில்லை. உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிவது கூட உங்களுக்குத் தெரிவதில்லை. இது நக்கல், கேலி பண்ணுவதற்கு இடமில்லை. தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலிருக்கும் பெண்களுக்குச் சொல்கிறேன். ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறார். நோய் ஒருத்தருக்கு ஒருத்தர் எனப் பரவிக் கொண்டே போகிறது. நம்மால் அடுத்தவருக்கும், அடுத்தவரால் நமக்கும் வரும். தயவுசெய்து அனைவரும் புரிந்துகொண்டு, கொஞ்ச நாளைக்கு வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். எவ்வளவோ பேர் நமக்காக வேலை செய்கிறார்கள். ஏன் அவர்கள் சொல்வதை யாருமே கேட்பதில்லை.

நம்மிடம் இருக்கும் காவல்துறையைக் கொண்டு வீட்டுக்கு ஒரு அதிகாரியைப் போட முடியாது. அவ்வளவு போலீஸ் எல்லாம் கிடையாது. அவர்களும் அனைவரையும் பார்க்க வேண்டும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அனைவரும் கவனமாக வீட்டிற்குள் இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். கிராமப்புற மக்களுக்குத்தான் முக்கியமாகச் சொல்கிறேன். கையெடுத்துக் கும்பிடுகிறேன். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அனைத்து மக்களையும் காப்பாற்றுங்கள். நீங்களும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்." என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய மகள் மற்றும் மகனும் கரோனா குறித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.