ADVERTISEMENT

"இரண்டு புகைப்படங்கள் என்னை கலங்கடித்துவிட்டன" - முதல்வர் குறித்து பூரித்து பேசிய சூரி

11:25 AM Mar 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இந்த புகைப்படக் கண்காட்சி கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். வரும் 27ஆம் தேதியுடன் இந்த கண்காட்சி நிறைவடைகிறது.

இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நடிகர் சூரி இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சூரி, "முதல்வரின் அரசியல் பயணத்தில், அவர் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் படைத்த சாதனைகள் என அனைத்தையும் இந்த கண்காட்சியில் பதிவு செய்துள்ளார்கள். நாமெல்லாம் நமது 14, 15 வயதில் கபடி, கோலி என விளையாடிட்டு இருந்தோம். ஆனால், ஸ்டாலின் என்ற மாணவர் அவரது 14 வயதில் கட்சிக்கு பிரச்சாரம் செய்து 15 வயதில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி 20 வயதில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து, அதன் பிறகு எதிர்பாராத இன்னல்களைச் சந்தித்து இந்தி எதிர்ப்பில், மிசாவில் ஜெயிலில் அடைத்து அங்கு பல கஷ்டங்களைச் சந்தித்துள்ளார். இவை அனைத்தும் புகைப்படக் கண்காட்சியில் வைத்திருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடிகிறது.

அது மட்டுமில்லாமல், சினிமா துறையிலும் காலடி வைத்து ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடிகராக ஒரு வார இதழின் ஆசிரியராக அதிலும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். பின்பு 36 வயதில் எம்.எல்.ஏ ஆகி, 43 வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். அந்தப் பெரிய பதவியை மக்கள் அவருக்கு வழங்கினர். சிங்கார சென்னை என்ற திட்டத்தை உருவாக்கி பல பூங்காக்கள், மேம்பாலங்கள், தூய்மை பணியாளர்களுக்கு வசதியாக நவீன வசதியை உருவாக்கியுள்ளார். இது போன்று பல விஷயங்களை முன்னெடுத்து முன்னாள் முதல்வர் கலைஞர் ஆசியுடன் எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து பணி செய்து வந்தார். அந்த உழைப்புக்காகத்தான் இன்று மக்கள் அவரை முதலமைச்சராக்கி உள்ளனர்.

ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கையில், ஒரு புகைப்படம் சிரிக்க வைக்கிறது; ஒரு புகைப்படம் சிந்திக்க வைக்கிறது; இன்னொரு புகைப்படம் அழ வைக்கிறது; மற்றொரு புகைப்படம் பிரமிக்க வைக்கிறது. அதன் பின்னால் பெரிய வரலாறு இருக்கிறது. கலைஞரின் மகன் என்பதால் உடனடியாக சீட் கொடுத்து அவருக்கு முதல்வர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கடைக்கோடித் தொண்டன் எப்படி கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் பணி செய்து மேலே வருகிறானோ, அது போல அவரது 14 வயதில் இருந்து அயராது உழைத்து இன்றைக்கு முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். தகுதியான இடத்திற்கு தகுதியான மனிதராக அவர் இருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலையே தெரிந்துகொள்ளலாம்.

இந்தக் கண்காட்சியில் இரண்டு புகைப்படங்கள் என்னைக் கலங்கடித்துவிட்டன. ஒன்று, கலைஞர் இறுதி மூச்சில் அவரிடம், தலைவரே உங்களை அப்பா என்று முதல் முறையாக அழைக்கட்டுமா என்று முதல்வர் கேட்பது. இரண்டாவது கலைஞர் இறந்த பிறகு கடற்கரையில் இடம் கேட்பது தொடர்பாகத் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு வந்தபோது முதல்வர் நிலைகுலைந்து நிற்கும் காட்சி. கலைஞர் எழுதியது நிறைய படங்களாக உருவாகியுள்ளன. அதுபோல் இவரது வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கும் முயற்சி பின்னாளில் எடுக்கப்படும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT