Skip to main content

பாடகர் கருத்தால் கொந்தளித்த படக்குழு; மன்னிப்பு கேட்டும் விடாத தயாரிப்பாளர்

Published on 08/05/2025 | Edited on 08/05/2025
sonu nigam song from kannada film removed after pahalgam remark

இந்தியாவில் இந்தி, கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் சோனு நிகம். இவர் சமீபத்தில் பெங்களூருவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது தொடர்ந்து அவர் இந்தி பாடல்கள் பாடியதால், கீழிருந்த ஒரு இளம் ரசிகர் ‘கன்னடா, கன்னடா...’ என கன்னட பாடல்களை பாடச் சொல்லி கூச்சலிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சோனு நிகம், “என்னுடைய அனுபவம் அளவுக்கு வயது இல்லாத ஒரு இளைஞர் கன்னடத்தில் பாடச் சொல்லி என்னை மிரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவன் பிறப்பதற்கு முன்பே நான் இந்த துறைக்குள் நுழைந்துவிட்டேன். பஹல்காமில் நடந்த சம்பவத்துக்கு கூட இதுபோன்ற அணுகுமுறைதான் காரணம். தயவுசெய்து உங்கள் முன் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள்” எனப் பேசியிருந்தார். 

சோனு நிகமின் இந்த பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து கன்னட அமைப்பினர் சோனு நிகமிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக சோனு நிகமிற்கு கண்டனம் தெரிவித்தனர். இது போக கர்நாடக ரக்ஷண வேதிகே என்ற அமைப்பினர் சோனு நிகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டிஸும் அனுப்பப்பட்டது. இதனிடையே சோனு நிகம் கன்னட சினிமாவில் பணியாற்றக்கூடாது அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சோனு நிகமுடன் தொழில் ரீதியாக கன்னடர்கள் எந்த தொடர்ப்பு வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து சோனு நிகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் பாடிய பாடல் ஒன்றை அப்படக்குழு நீக்கியுள்ளது. கன்னடத்தில் கே.ராம்நாராயண் இயக்கத்தில் மதேனூர் மனு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குலதல்லி கீலியாவுடோ’. இப்படத்தில் சோனு நிகம், படத் தலைப்பு பாடலான ‘குலதல்லி கீலியாவுடோ’ மற்றும் ‘மனசு ஹாட்டடே’ என இரண்டு பாடல்களை பாடியிருந்தார். இப்பாடல்கள் தற்போது அவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

பாடல்கள் நீக்கியது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், “சோனு நிகம் ஒரு நல்ல பாடகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் கன்னடத்தைப் பற்றி பேசிய விதம் எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. கன்னடத்திற்கு சோனு நிகம் செய்த அவமானத்தை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே பாடல்களை நீக்கியுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் படக்குழுவினர் தற்போது கன்னட பாடகர் சேத்தனை வைத்து அந்த இரண்டு பாடல்களை பதிவு செய்துள்ளனர். இது போக படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் குமார், இனிமேல் சோனு நிகமுடன் பணிபுரிய மாட்டேன் என அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘குலதல்லி கீலியாவுடோ’ படம் வருகிற 23ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்