
சமீபத்தில் வெளியான தடம் படத்தில் மனதில் பதியும் படியான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சோனியா அகர்வால் தன் பட அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியபோது...."நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது அபூர்வம். படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தன் மகனை வைத்து முதன்முதலாக படம் எடுப்பதால் அவருக்கு தகுந்தாற்போல் ஹைதராபாத்தில் இருந்து ஒரு பிரபல ஹீரோயினை புக் செய்து படத்தை ஆரம்பித்து விட்டார். அப்போது நான் அவரின் தயாரிப்பிலேயே உருவான 'கோவில்' படத்தில் நடித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் 'கோவில்' படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அதில் 7ஜி படத்தில் நீங்களே நடித்து விடுங்கள் என்று சொன்னார். எனக்கு இன்ப அதிர்ச்சியாகிவிட்டது. நான் உடனே ஏன், என்னவாயிற்று என கேட்டேன். அதற்கு அவர் அந்த ஹீரோயின் சரியாக நடிக்கவில்லை. மேலும் இயக்குனர் செல்வராகவனும் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறார் என கூற நான் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இப்படித்தான் எனக்கு 7ஜி பட வாய்ப்பு அமைந்தது" என்றார்.