sivakarthikeyan

மெரினா படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயனை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு கிடைத்த வெற்றி பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. இப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

Advertisment

இதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், "'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2ஆம் பாகம் குறித்து பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது" எனக் கூறினார்.

Advertisment

இந்த நிலையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' குறித்து இயக்குநர் பொன்ராம் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் முதிர்ச்சி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய…" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பொன்ராமின் இந்தப்பதிவு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. சிவகார்த்திகேயன் இல்லாமல் இப்படத்தை எடுக்க வேண்டாம் அல்லது அதே பெயரை பயன்படுத்த வேண்டாம் என பொன்ராமின் அப்பதிவிற்கு கீழே ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.