எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகஎஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். தன்னை ஒரு பட நிகழ்ச்சிக்கு அழைத்தநிலையில் அதற்கு வரமுடியாமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்த பதிவில் இதை குறிப்பிட்டுள்ளார். பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ், வேதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஸாக்கர். கூடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யாத சத்யநாராயணா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ளும்படி எஸ்.ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதில் கலந்துகொள்ளாத சூழலில் இருப்பதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் தம்பி பாபி சிம்ஹா கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் தம்பி. மேலும் படத்தின் வெற்றிசிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே சூர்யாவின் உடல் நலம் தேறி வருமாறு கமெண்ட் செய்த நிலையில், அது தொடர்பாக பதிவிட்ட எஸ்.ஜே சூர்யா, “4வது நாளாக முன்னேறி வருகிறோம். அன்பிற்காக எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.