நடிகர் மற்றும் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘சர்தார் 2’ படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆனால் இயக்குநராக கடைசியாக ‘இசை’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதன் பிறகு நடிப்பில் பிஸியான எஸ்.ஜே.சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கில்லர்’ படம் மூலம் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார்.  

இப்படம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நிகழ்வில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, படம் நியூ 2 மாதிரியான ஒரு படமாக இருக்குமென கூறியிருந்தார். இப்படத்திற்காக ஒரு சொகுசு காரை ஜெர்மனியில் இருந்து இங்கு இறக்குமதி செய்தார். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்து பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தை கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. இவரோடு இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் என்ற பேனரில் எஸ்.ஜே.சூர்யாவே இப்படத்தை தயாரிக்கவும் உள்ளார். இப்படத்தில் அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒரு போஸ்டரில் ஸ்டைலிஷான கெட்டப்பில் கையில் துப்பாக்கியுடன் எஸ்.ஜே.சூர்யா நிற்கிறார். மற்றொரு போஸ்டரில் ப்ரீத்தி அஸ்ரானியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு மற்றொரு கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு பரிசாக இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்க பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.