தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது 'பொம்மை' என்றபடத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கில்லர்' என்ற தலைப்பில் தயாரித்து இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக ஒரு சொகுசு காரை ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எஸ்.ஜே. சூர்யா இறக்குமதி செய்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான வாலி, குஷிஉள்ளிட்டபடங்கள் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடைசியாக 'இசை' என்றபடத்தை இயக்கியிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் பல வெற்றிப் படங்களில் நடிகராக நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா படம்இயக்கவுள்ளதாக கூறப்படும் இந்த தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.