பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. இதற்கிடையில், இப்படம் வெளியாகி 1 ஆண்டை நிறைவு செய்ததையொட்டி,சர்தார் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முந்தைய பாகத்தில் நடித்திருந்த நடிகர்களான ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்தார் படத்தில் இசையமைத்திருந்த ஜி.வி.பிரகாஷுக்கு மாற்றாக இரண்டாம் பாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய நடிகர் இணையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.