சத்யராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 6ஆம் தேதி, வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்திகேயன் மணி இயக்கியிருந்த இப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கியிருந்தது. கே.சி. பாலசாரங்கன் இசையமைத்திருந்த இப்படம் மிடில் கிளாஸ் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு ஓடிடியில் வெளியான பிறகும் சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதோடு திரைப் பிரபலங்கள், லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். பட வெற்றி தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விழாவும் படக்குழுவினரால் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “அன்பிற்கினிய சிவகார்த்திகேயன் மெட்ராஸ் மேட்னி, திரைப்படத்தை படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.