சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (21.10.2022) தேதிவெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள ப்ரின்ஸ் படத்திற்காக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் ஒரு பகுதியாக தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனிடம், "நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்" என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்"ஷூட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார். ஆனா கதை எப்ப சார் கேட்கலாம்" என பதிலளித்துள்ளார்.
மேலும், "உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார். அந்த படத்துல பிரேம்ஜி பிரதருடன் நான் எந்த ரோலில் நடிக்கிறேன். அத தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கேன் சார்" என ஜாலியாக பதிலளித்துள்ளார். வழக்கமாக வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் அவரது தம்பி பிரேம்ஜி இடம் பெற்றுவிடுவார். அதனை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
முன்னதாக ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இதே போல் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவை கலாய்த்திருப்பார். அதில், "இவர் கதை இல்லாமல் கூட படமெடுப்பார். ஆனால் தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார். பேசாம...இவருக்கு தம்பியா பிறந்திருக்கலாம் போல..." என ஜாலியாக பேசியிருப்பார் என்பது நினைவு கூறத்தக்கது.
சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் நடைபெற்ற ‘ப்ரின்ஸ்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார். வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து இயக்கி வரும் 'என்.சி 22' படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.