/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/221_30.jpg)
பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பாலாவில் 25ஆம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் சேர்ந்து சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ்குமார், மாரி செல்வராஜ், மிஷ்னின், நித்திலன் சாமிநாதன், நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது சிவகார்த்திகேயன் பேசுகையில், “எனது 14 வயதில் சேது படம் பார்த்தேன். படத்தின் க்ளைமேக்ஸ் என்னைப் பாதித்தது. முன்பு இயக்குநர் பாலாவின் படத்தை தியேட்டரில் பாரத்ததை, இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படத்தில் சோகமான முடிவு இருந்தது. அதனால் தீபாவளிக்கு சோகமான முடிவுகளுடன் வெளியாகும் படங்கள் ஓடாது என்று சொன்னார்கள். ஆனால், பாலாவின் பிதாமகன் படம் தீபாவளிக்கு வெளியாகி ஹிட்டானது எனக்கு மனவலிமை கொடுத்தது. பாலா மாதிரி படம் எடுக்க நினைத்து ஊரில் இருந்து கிளம்பி வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தளவிற்கு அவர் தனது படங்கள் மூலம் தனித்துவமான திரைமொழியால் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அருண் விஜய் என்னிடம், ‘நீ கண்டிப்பா வரணும் தம்பி’ என நிகழ்ச்சிக்கு அழைத்தார். அவர் எனக்கு சீனியர். விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்வது தான் அருண் விஜய்யின் உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். பொங்கலுக்கு அஜித் குமார் படமும் வணங்கான் படமும் வருகிறது. இரண்டு படத்தின் ஆங்கில எழுத்து V-யில் ஆரம்பிக்கிறது. V என்றால் வெற்றி (Victory). இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து, 2025-ல் தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கட்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)