ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரவி மோகன், அவரது தோழி பாடகி கெனிஷா, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்வில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “ஒரு தயாரிப்பு நிறுவனம் என்பது படம் தயாரிப்பதை தாண்டி பல கனவுகளை ஸ்க்ரீனில் கொண்டு வரும் ஒரு பொறுப்பு. ரவி மோகன், என்னை விட சினிமாவில் ரொம்ப ரொம்ப சீனியர். பராசக்தி பண்ணும் போதுதான் அவருடன் அதிகம் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நாம் இதுவரை பார்த்த அவரது படங்களில் இருப்பது போலத்தான் நேரிலும் இருக்கிறார். ரொம்ப ரொம்ப பண்பானவர். இங்கு வந்து பார்க்கும் போது அவருக்குள் இருக்கும் சினிமா மீதான ஆர்வம், எவ்ளோ எனத் தெரிய வருகிறது. எல்லாருக்கும் டைரக்ட் பண்ண வேண்டும் என ஆசை வரும். ஆனால் அதற்கு எல்லா கிராஃப்டும் தெரிந்திருக்க வேண்டும். ரவி சாருக்கு அந்த தகுதி இருக்கு. அதே போல் கார்த்தி, மணிகண்டன்(குட் நைட்) கூடிய சீக்கிரம் டைரக்டர் ஆவார்கள். அவங்களுக்கு அந்த தகுதி இருக்கிறது. 

நடிகர்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் எங்கள் மேல் விழுகிற வெளிச்சம், அந்த படக்குழுவினர் மீதும் விழும். அப்போது எங்களுக்கு மக்கள் கொடுத்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொல்கிறோம் என்ற உணர்வை கொடுக்கும். ரவி சார் தயாரிக்கிற அனைத்து படங்களும் வெற்றி பெறும். அந்த சக்சஸ் மீட்டிலும் சந்திப்போம். அப்படி நடந்தால் தான் இந்த விழாவின் முயற்சி முழுமை பெரும். ஜெனிலியாவும் ரவி சாரும் இங்கு சந்தோஷ் சுப்ரமணியம் பட சீனை ரீ-க்ரியேட் செய்தது அழகாக இருந்தது. அவங்க இரண்டு பேரும் மீண்டும் சேர வேண்டும் என்பது என் ஆசை. 

தயாரிப்பு நிறுவனத்துக்கு எப்போதுமே பணம் ரொம்ப முக்கியம். நானும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். தயாரிப்பில் உருவாகும் படங்கள் கொடுக்கும் சந்தோஷம் நான் நடிக்கும் படங்களில் உருவாகுவதில்லை. அதே போல் தயாரிப்பில் இருக்கும் சுதந்திரமும் நடிப்பில் கிடைப்பதில்லை. இப்போது நான் தயாரித்திருக்கும் ஒரு படத்தை பார்த்தேன். அன்னைக்கு எனக்கு தூக்கமே வரவில்லை. அம்மாக்கு பிள்ளையை பெற்ற ஃபீல் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. தயாரிப்பை இங்கு நிறைய பேர் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். ரவி சாரை விட இதில் நான் கொஞ்சம் சீனியர். அவர் என்னிடம் எதுவாக இருந்தாலும் கேட்கலாம். நானும் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்” என்றார்.