தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

Advertisment

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “இந்த மேடையில் மாணவர்கள் பேசிய கதைகள் எனக்குள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனை உருவாக்கியிருக்கு. இவர்கள் அனைவரும் எப்படியாவது படித்து மேலே வர வேண்டும் என நினைக்கிறார்கள். அதை அரசு செய்யும் நல்ல விஷயத்தை போல் சிறப்பான விஷயமாக பார்க்கிறேன். 

Advertisment

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். உலகத்தில் எதுவெல்லாம் செல்வம் என நினைக்கிறோமோ அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்வி. இங்க நிறைய பேர் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம், போயிட்டு வர பஸ் வசதி இல்லை என தங்களது அனுபவங்களை சொன்னார்கள். ஆனால் நான் மூணு வேலையும் சாப்பிட்டு தான் ஸ்கூலுக்கு போனேன். ஏனென்றால் எங்க அப்பா ஒரு வேலை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போனதால். நான் ஆட்டோவில் ஸ்கூலுக்கு போனேன், ஏனென்றால் எங்க அப்பா நடந்து ஸ்கூலுக்கு போனதால். அதனால் ஒரு தலைமுறையில் ஒருவர் கஷ்டப்பட்டு படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும் என்பதை என் குடும்பத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். என் அப்பா அவர் குடும்பத்தில் இருந்த வசதிக்கு நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை. கிடைத்த படிப்பை தான் படித்தார். அதனால் அவர் ஒரு டிகிரி வாங்கினார். ஆனால் அவருடைய பையனாக இருக்கும் நான் இரண்டு டிகிரி வாங்கியிருக்கேன். என் அக்கா மூன்று டிகிரி முடித்திருக்கார். 

நான் படித்த துறைக்கும் வேலை செய்யும் துறைக்கும் சம்பந்தம் இல்லை. சினிமாத்துறை என்பது சவால் நிறைந்த ஒன்று. அந்த சவால் வரும்போதெல்லாம் எனக்கு இருக்கிற ஒரே தைரியம் என்னிடம் இரண்டு டிகிரி இருப்பதுதான். என்னை இப்பவே அனுப்பிவிட்டால் கூட என்னுடைய டிகிரியை வைத்து என்னால் வாழ முடியும். நான் ஒரளவு டீசன்டாக படித்தேன். ஆனால் சினிமாவில் ஆர்வம் இருந்ததால் இங்கு வந்துவிட்டேன். 
வாழ்க்கையில் நீங்க ஜெயிக்க வேண்டும் என்றால் படியுங்கள். அதே போல் நன்றாக வாழ வேண்டுமா, அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டுமா, எல்லார் முன்னாடியும் மரியாதையாக இருக்க வேண்டுமா, அவங்க முன்னாடி சமமா இருக்க வேண்டுமா... இதுஅனைத்துக்கும் ஒரே தீர்வு படிப்பது தான். மார்க்குக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்” என்றார். 

Advertisment