ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மணிரத்னம், தயாரிப்பாளர் தாணு, லோகேஷ் கனகராஜ், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது சாய் பல்லவி குறித்து பேசிய அவர், “பிரேமம் படத்தை தியேட்டரில் பார்த்த போது மலர் டீச்சர் ஸ்க்ரீனில் வந்தவுடன் மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. எனக்கு தெரிந்து டீச்சர் என்றாலே பசங்க தெரிச்சு ஓடுவாங்க. ஆனால் முதல் முதலில் டீச்சரை பார்த்து உற்சாகமடைந்தது மலர் டீச்சருக்குத்தான். படம் பார்த்தவுடன் மலர் டீச்சருக்கு எப்படி எல்லாரும் ரசிகராக மாறினார்களோ நானும் மாறினேன். அவங்க நம்பர தேடி கண்டுபுடிச்சு, ஹலோ சாய் பல்லவி, நான் சிவகார்த்திகேயன் பேசுறேன், பிரேமம் படத்துல சூப்பரா நடிச்சிருந்தீங்க என்றேன். ‘அண்ணா ரொம்ப நன்றி அண்ணா’ என்றார். அவர் சொன்னதை கடந்துவிட்டு படத்தில் நடித்த ஒவ்வொரு காட்சியையும் அவரிடம் சொன்னேன். திரும்பவும் நன்றி அண்ணா என்றார்.
தொடர்ந்து நான் சொல்ல சொல்ல அண்ணா அண்ணா என சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரை நிறுத்த சொல்லிவிட்டு, நான் மலர் டீச்சர்னு நினைச்சு பேசிக்கிட்டு இருக்கேன். நீ மலர் டீச்சராவே பேசு. படத்தில் வருவது போல என்னை மறந்து கூட போய்விடு. ஆனால் அண்ணான்னு மட்டும் சொல்லாதே என்றேன். அப்போது என்னைக்காவது நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் சூழல் வரலாம் என சொன்னேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த கால இடைவெளியில் அவர் ஒரு நடிகை, ஸ்டார் என பிரித்துவிட முடியாது. அவங்களுக்கு என ஒரு தனி இமேஜை உருவாக்கியிருக்கிறார். சாய் பல்லவி என்பது தனி அடையாளம்” என்றார்.