பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’. இப்படத்தில் விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

ஜே சி ஜோ இசையமைத்துள்ள இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், இருவரும் சார்லி சாப்ளின் கெட்டப்பில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோபி - சுதாகருடன் சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருக்கிறார். மூவரும் ஒரு சோபாவில் உட்கார்ந்திருக்க, சுதாகர் கையில் வையலினை வைத்துக் கொண்டு படத்திற்காக வையலின் வாசிக்க கற்றுக் கொண்டதாக சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அதை கேட்டு ஆச்சரியமடைந்த சிவகார்த்திகேயன், வாசிக்க சொல்ல பின்பு சுதாகர் வாசித்து காண்பிக்கிறார். அவர் சரியாக வாசிக்காமல் போக, சிவகார்த்திகேயன் சற்று கோபப்படுகிறார். பின்பு சிவகார்த்திகேயன் பட பாடலை வாசித்து காண்பிப்பதாக கூறும் சுதாகர் மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற ‘உன் விழிகளில் விழுந்த நாட்களில்’ பாடலை வாசித்து காண்பிப்பதாக சொல்லி மீண்டும் சரியாக வாசிக்காமல் போகிறார். பின்பு சிவகார்த்திகேயன் கோபித்துகொண்டு போவது போலவும் பின்பு கோபி சமாளித்து அனுப்பிவைப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நகைச்சுவையாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ‘வேணும் மச்சா பீஸ்’(Venum Macha Peace) என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment