/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/129_19.jpg)
கடந்த 2019-ம் ஆண்டு டேக் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்சிவில் வழக்கு ஒன்றைத்தொடர்ந்தார். அதில், "கே.ஜே.ஆர். ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ படத்தை தயாரிப்பதற்காக 5 கோடி கடனாக பெற்றிருந்தன. அந்தத்தொகையை வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக செலுத்த உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் "எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் இதுவரை தரவில்லை. எனவே, சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறி கூடுதல் மனு ஒன்று டேக் என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சரவணன் முன்பு நடந்த இந்த வழக்கில், டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தரப்பில், "2019ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், பிரின்ஸ் படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
அப்போது சிவகார்த்திகேயன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிகர் என்ற முறையில் மட்டுமே சம்பளம் பெற்றுக்கொண்டு நடித்தார். தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திரைத் துறையில் அவருக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஐந்து படங்களுக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் இல்லை என்பதற்கான ஆதாரமாக சென்சார் போர்டு சான்றிதழ்கள் இருக்கின்றன" என்று வாதிட்டார். மேலும் அந்த சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சான்றிதழ்களை ஆய்வு செய்தார். பின்பு ப்ரின்ஸ் படத்தின் தயாரிப்புக்கும், சிவகார்த்திகேயனுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சிவகார்த்திகேயனின் சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி டேக் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)