சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்த நிலையில் சற்று தாமதமாக இரவு 8 மணிக்கு மேல் வெளியானது.
இப்பாடலை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியிருக்க சூப்பர் சுபு எழுதியுள்ளார். பாடல் ஆரம்பத்தில் காதல் தோல்வியில் இருக்கும் நாயகன் சோகமாக புலம்பிக் கொண்டு இருக்க பின்பு அவரை சோகன் உனக்குத்தான் எங்களுக்கு இல்லை, அதனால் வைபாக பாடு என சிலர் சொல்கின்றனர். அதனால் பயங்கர எனர்ஜியுடன் நாயகன் பாடுகிறார். காதல் தோல்வியிலிருந்து பாடும் அவர், ‘ராஷ்மிகா வந்தாலும் ஜெண்டயாவே நின்னாலும் திரும்பி பார்க்க கூட மாட்டனே... மார்கெட்டு பெருசு, மைக் செட்டு புதுசு, டேலண்ட காட்டினாதான் நிலைக்கும் பர்சு...’ என்று பாசிட்டிவாகவும் பாடுகிறார்.
பாடும் எனர்ஜியுடன் நடனமும் ஆடுகிறார். அதில் இடம்பெற்றிருக்கும் சில ஸ்டெப்புகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடல் தற்போது வரை யூட்யூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இப்பாடலுக்கு சேகர் நடனம் அமைத்துள்ளார். இவர் தெலுங்கில் ஹிட்டடித்த ‘குர்ச்சி மடத்தபெட்டி’(குண்டூர் காரம்) மற்றும் தமிழில் ‘மட்ட’(கோட்) ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.