அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கடேஷ் இணைத்து தயாரித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை ‘டம்மா கோலி...’, ‘ஆச ஒரவே...’, ‘சில்லாஞ்சிருக்கியே...’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் நாளை (20.09.2024) வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த படக்குழு, சிவகார்த்திகேயன் பாராட்டி பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவை அருகில் வைத்து கொண்டு சிவகார்த்திகேயன் பேசுகையில், “எங்க டீமில் இருந்து இன்னொரு படம் வருவதாகத்தான் நான் பார்க்கிறேன். அது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது. தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. அதை எழுதின விதம் அழகாக இருந்தது. இந்த படம் நிறைய பேருடைய பயோ-பிக் என்று நினைக்கிறேன். யாராவது கேஸ் போட வேண்டும் என்றால் இயக்குநர் மேல் போடுங்கள்” என ஜாலியாக சிரித்து கொண்டே இயக்குநரை கலாய்த்தார்.
தொடர்ந்து பேசிய அவர் படத்தில் இடம்பெறும் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் குறித்து பேசியபோது, “துபாய் போகும்போது பிரேமலதாவை சந்தித்தேன். அவரிடம் படத்தில் வரும் விஜயகாந்தின் ரெஃபரன்ஸ் பற்றி சொல்லியிருக்கிறேன்” என்றார். மேலும், “இயக்குநர் ஒரு விஜயகாந்தின் ரசிகர். படத்தில் அவர் பயன்படுத்திய விஜயகாந்தின் பாடல், நன்றாக இருந்தது. அது அந்த பாடலுக்கான மரியாதையும் விஜயகாந்திற்கான மரியாதையும் தவறாக போகதபடி சரியாக அமைந்தது. இந்த படம் கண்டிப்பாக கேப்டனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும்” என்றார். இப்படத்தின் இயக்குநர் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.