Skip to main content

“சிவகார்த்திகேயன்ட்ட இரண்டு கேள்விகள் கேட்கணும்”... பாண்டி - சிவா கூட்டணியின் கதை

Published on 26/09/2019 | Edited on 27/09/2019

“சிவகார்த்திகேயன்கிட்ட இரண்டு கேள்விகள் கேட்கனும். ஒன்னுவந்து என் டைரக்‌ஷன்ல, பசங்க ப்ரொடக்‌ஷன்ல நடிக்க எப்போ கால்ஷீட் தருவீங்க, இன்னொரு கேள்வி சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவன் என்பதில் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என்னோட இயக்கத்துல அறிமுகமானது பெருமையாக இருக்கா? இல்லை வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் வேறு மாதிரி அறிமுகமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”. இது சென்ற ஆண்டு கடைக்குட்டி சிங்கம் ரிலீஸ் சமயத்தில் பாண்டிராஜ் நமக்குத் தந்த பேட்டியின் போது, முன்னணி நட்சத்திரங்களிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னது. இவ்விரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிப்பதுபோல் ஒராண்டிற்குள்ளாகவே ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் பாண்டிராஜுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியும் ஒரு காரணம். 

 

sivakarthikeyan

 

 

இன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், யூ-ட்யூப் ஷோக்களில், காமெடி ஷோக்களில் பல வழிகளிலும், பல ஆடிஷன்களிலும் முயன்று வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை விதைத்தவர்களில் முக்கியமானவர் சிவா. விஜய் டிவியில் ஷோக்கள் மூலமாக மக்களை கவர்ந்து ஒவ்வொரு வீட்டின் பிள்ளையாகவும் வலம் வந்த சிவகார்த்திகேயன், பெரிய திரையில் அடியெடுத்து வைக்க உதவியாக இருந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அவருடைய மூன்றாவது படமான ‘மெரினா’ மூலம் சின்னத்திரையில் பிரபலமாக இருந்த சிவாவை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியவர். ஒரு பெரிய நாயகன் போன்ற கதாபாத்திரமாக அது இல்லை என்றாலும் சிவா வெள்ளித்திரை வருவதற்கு ஒரு வாசலாக இருந்தது.

அதன் பிறகு ‘3’ படத்தில் நகைச்சுவை வேடத்திலும் மனம்கொத்திப் பறவையில் நாயகனாகவும் நடித்த சிவாவிற்கு மீண்டும் ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ வாய்ப்பளித்தார் இயக்குனர் பாண்டிராஜ். அந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே பாண்டிராஜால் அறிமுகம் செய்யப்பட்ட விமலும் நடித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ’எதிர்நீச்சல்’ படம் வெளியானது. ’எதிர்நீச்சல்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் கிராஃப் வேறு மாதிரி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே!

பொன்ராம், துரை செந்தில்குமார் போன்ற இயக்குனர்களுடன் மீண்டும் மீண்டும் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலேயே போனது. ஆனால் பாண்டிராஜுக்கு சிவாவை இயக்க வேண்டும் என்கிற விருப்பம் இருப்பதை சில பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார். 
 

siva with pandiraj

 

 

சிவகார்த்திகேயனுக்கு வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மீண்டும் பாண்டிராஜுடன் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திலிருந்து தனது சினிமா பயணம் வேறு மாதிரி இருக்கும் என்று பல மேடைகளில் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் சிவா. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன. 

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அமைந்துள்ள இந்தக் கூட்டணியில், சிவகார்த்திகேயன் சில தோல்விகளுக்கு பின் இணைந்துள்ளார். இயக்குனரோ மிகப்பரிய வெற்றிக்கு பின்னர் இணைந்துள்ளார். இயக்குனருக்கு முந்தைய வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றி கொடுக்க வேண்டும். அதேபோல சிவாவிற்கு பிரம்மாண்ட வெற்றி வேண்டும் என்ற சூழலில் இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்