சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ளப் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Advertisment

இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து புரொமோஷன் பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் பல நேர்காணல்களைக் கொடுத்து வந்தார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. அதே நேரம் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. ‘உன்னைப் பொல் பிறரை நேசி... எல்லாரையும் உன் குடும்பமா நினை... இதுதான் எல்லா கடவுளும் சொல்றாங்க...’ என ருக்மிணி வசந்த் பேசும் வசனத்துடன் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டிற்குச் சட்டவிரோதமாக வரும் பொருட்களை மாநிலத்தின் எல்லையிலே தடுக்கத் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தடுக்கின்றனர். பின்பு பெரும் பாம்ப் பிளாஸ்ட் நடக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் கடுமையாக மன ரீதியில் பாதிக்கப்படுகிறார். இது குறித்து ருக்மிணி வசந்திடம் சொல்லும் டாக்டர், ‘அவன் உடம்புக்கு ஒன்னுமில்லம்மா... மூளைதான்... அவன் ஒன்னு நினைச்சுட்டான்னா... அதை முடிக்கிறதுக்கு எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் வேணாலும் போவான்’ என சொல்ல, உடனே சிவகார்த்திகேயன் ரக்கட் லுக்கில் முரட்டுத்தனமான ஆள் போல் தோன்றுகிறார்.

அடுத்து வில்லன் வித்யூத் ஜமால் வர, அவருக்கும் இவருக்குமான கேட் அண்ட் மவுஸ் கேம் ஆரம்பிக்கிறது. அதில் வில்லன், ருக்மிணியை கொன்றுவிடுவதாக மிரட்ட, ‘முடிஞ்சா தொட்ரா’ என சிவகார்த்திகேயன் பதிலடி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். இறுதியில் இருவருக்கும் நடக்கும் மோதலில் யார் வெற்றி பெற்றார், என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது. இதில் ஹைலைட்டாக வில்லன் வித்யூத் ஜமால் பேசும் வசனம் அமைந்துள்ளது. அதாவது, ‘துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான் தாண்டா’ என்று பேசுகிறார். இதற்கு முன்னாடி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த துப்பாக்கி படத்தில் இவர் தான் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறுகிறது. ஆக்‌ஷன் அதிகமுள்ள ஒரு த்ரில்லர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கியது போல தெரிகிறது.

Advertisment