சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக கடந்த 29ஆம் தேதி ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டது. மேலும் இது காதல் தோல்வியை மையப்படுத்தி இருக்கும் பாடல் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியுள்ளதாகவும் சூப்பர் சுபு எழுதியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘சலம்பல’ பாடல் சொன்ன நேரத்தில் வெளியாகாமல் இன்று இரவு வெளியாகும் என சிறிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சாய் அபயங்கர் பாடும் காட்சிகள் இடம் பெறுகிறது. பாடல் தாமதாக வெளியாகவுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சற்று கோபத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே பாடலின் புரொமோவையும் சொன்ன நேரத்தை விட சற்று தாமதமாகவே படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தகக்து.